தமிழ்

சுபாஷிதம் 01 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும் --- திருக்குறள் (625) பொருள்: இடைவிடாது மேலும் மேலும் வருவாயினும் தனது மனத்திட்பத்தை விடாதவன் அடையும் துன்பம் துன்பத்தில் பட்டு அழியும். மனவலிமை உடையவனிடம் துன்பம் படுதோல்வி அடையும் என்பது வலியுறுத்தப்பட்டது சுபாஷிதம் – 02 அவரவர் தமதமது அறிவறி வகைவகை அவரவர் இறையவர் என அடி அடைவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் அவரவர் விதிவழி அடைய நின்றனரே --- நம்மாழ்வார் திருவாய்மொழி பொருள்: அவரவர் தமது தமது அறிவுகளுக்குத் தோன்றிய வகைப்படியே அந்தந்த தெய்வ வடிவங்களை இறையவர் என அடிபணிவார்கள்; அவரவர் தெய்வங்கள் குறையுடையவரே அல்லர்; ஓர் இறைவரே அவரவருடைய விதிப்படியே அடையும் படி நின்று அருள் புரிகிறார் சுபாஷிதம் 03 அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃது உண்டேல் தவா அதுமேன் மேலும் வரும் திருக்குறள் (368) பொருள்: ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால் எல்லாத் துன்பங்களும் முடிவில்லாமல் இடைவிடாமல் வரும். சுபாஷிதம் 04 அறனறிந்து மூத்த அறிவுகையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் --திருக்குறள் பொருள்: அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக் கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும் சுபாஷிதம் - 05 அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பினோர் வெள்ளம் பொறிகளின் மீது தனி அரசாணை பொழுதெல்லாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம் கருமயோகத்தில் நிலைத்திடல் என்றிவை அருளாய் குறி குணம் ஏதும் இல்லாதாய் அனைத்தாய்க் குலவிடு தனிப்பரம் பொருளே ---- மகாகவி சுப்ரமணிய பாரதியார் சுபாஷிதம் 06 அல்லலுறும் இவ்வுலகாம் ஆரணியத்து ஒரிரண்டே நல்ல கனிகள் நாடுமினொ சொல்லின் ஒன்று நூல் ஆகும்; மற்றொன்றோ நுண்ணறிவு சீலமிக்க மேலோர் நட்பாகுமிது மெய் ----- தர்மதீபிகை சுபாஷிதம் 07 அன்று அறிவாம் என்னாது அறம்செய்க மற்று அது பொன்றுங்கால் பொன்றாத் துணை பொருள்: பிறகு செய்து கொள்ளலாம் என்று கருதாது இளமையிலேயே செய்கின்ற அறம் உயிர் போகும் காலத்தில் அதற்கு அழிவில்லாத் துணையாகும் சுபாஷிதம் 08 அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி அரும்பசி எவர்க்கும் ஆற்றி மனத்துளே பேதாபேதம் வஞ்சனை, பொய், களவு சூது சினத்தையும் தவிப்பாயாகில் செய்தவம் வேறுண்டோ? ----- வள்ளலார் சுபாஷிதம் 09 ஆரியர் இருமின்! ஆண்கள் இங்கு இருமின்! வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்! மானமே பெரிதென மதிப்பவர் இருமின்! ஈனமே பெறாத இயல்பினர் இருமின்! தாய் நாட்டன்புறு தனயர் இங்கு இருமின்! சுப்ரமண்ய பாரதியார் சுபாஷிதம் 10 ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை ---திருக்குறள் பொருள்: சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிகேட்டுக் கொண்டு போய்ச்சேரும் சுபாஷிதம் 11 ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை ---- முது மொழிக் காஞ்சி பாடல் பொருள்: கடலால் சூழப்பட்ட இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும், நல்ல நூலகளைப் படிப்பதை விட நல்ல ஒழுக்கம் உடையவராய் இருத்தல் சிறந்ததாகும் (மதுரை கூடலூர் கிழார் எழுதிய இந்நூல் பதினெண் கீழ் கணக்கு நூலகளுள் ஒன்று) சுபாஷிதம் 12 ஆறுஇடும் மேடும் மடுவும் ஆம்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் – சோறு இடும்; தண்ணீரும் வாரும் தரும்மே சார்புஆக, உள்நீர்மை வீறும், உயர்ந்து --- நல்வழியில் ஒளவையார் பொருள்: ஆற்றில் தண்ணீர் ஓடும் வேகத்திற்கு ஏற்ப மேடுகளும் பள்ளங்களும் மாறி மாறி அமையும். அதைப்போல், செல்வமும் ஒருவரிடம் நிலைத்து இருப்பது இல்லை. ஒருவரிடம் மிகுதியாக செல்வம் சேரும். வேறு ஒருவரிடம் குறைவாகச் செல்வம் சேரும். அதுவும் நிலையாக இருப்பதில்லை. எனவே, செல்வம் இருக்கின்ற போதே அந்தச் செல்வத்தைப் பயன்படுத்தி உணவளித்தல், தண்ணீர் பந்தல் அமைத்தல் முதலிய அறச் செயல்கள் செய்ய வேண்டும். இவ்வாறு அறசெயல்களைச் செய்தால் நமது உள்ளம் மகிழ்ச்சி அடையும். சுபாஷிதம் 13 இன்னா செய்தாரை யொறுத்த லவர்நாண நன்னயம் செய்து விடல் திருக்குறள் சுபாஷிதம் 14 இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால் தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் எம்மை யுலகத்தும் யாம் காணோம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து --- நாலடியார் பொருள்: கல்வி இப்பிறவியின் பயனை அளிக்கும். மற்றவர்க்கு அளிப்பதால் குறைவதில்லை. கற்ற தம்மை அறிவால் விளங்கச் செய்யும் அதனால் எந்த கெடுதலும் இல்லை எனவே எவ்வுலகத்திலும் கல்வியைப் போல அறியாமையான நோயைப் போக்கும் மருந்து எதுவுமில்லை சுபாஷிதம் 15 இடர் வரும் போதும் – உள்ளம் இரங்கிடும் போது உடன் பிறந்தவர் போல் – மாந்தர் உறவு கொள்பவாரப்பா! நன்மை செய்பவரே – உலகம் நாடும் மேற்குலத்தோர் திண்மை செய்பவரே – அண்டித் தீண்ட ஒண்ணாதார் --- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சுபாஷிதம் 16 இரும்பின் இரும்பிடை போழ்ப – பெருஞ் சிறப்பின் நீருண்டார் நீரான் வாய்பூசப – தேரின் அரிய அரியவற்றார் கொள்ப- பெரிய பெரியரான் எய்தப்படும் ---- நான்மணிக்கடிகை பொருள்: இரும்புக் கருவிகளால் இரும்பை வெட்டுவர். சிறந்த நீருணவுகளச் சாப்பிட்டவர் நீரினால் வாய் கழுவுவர். அரிய செயல்களை அரிய முயற்சிகளால்தான் சாதிக்க முடியும். பெரிய பேறுகளை பெரியோர் அடைவர். சுபாஷிதம் – 17 உண்மை அரிச்சந்திரனை உவந்தளித்த நாடு உயர்ஜனகன் ராமபிரான் உலவிய பொன்னாடு கண்ணன் விளையாடலெல்லாம் கண்டு களி நாடு கண்ணனொடு பஞ்சவர்கள் காத்த தனி நாடு தண்மைநிறை புத்தரவர் தருமம் வளர்நாடு தகைமையுறு வள்ளுவர்தம் தமிழ் பிறந்த நாடு பண்அமரும் கரிகாலன் பரித்த புகழ் நாடு பகைவர்களும் தொழுதேத்தும் பாரத நன்னாடே ------- திரு.வி.க [பண் அமரும் கரிகாலன் பரித்த – புலவர்களால் பாடப் பெற்றவனாகிய கரிகாலன் ஆண்ட] சுபாஷிதம் - 18 உரமொருவற்கு உள்ள வெறுக்கை; அஃதிலார் மரம் மக்களாதலே வேறு ---- திருக்குறள் (600) பொருள்: ஒருவனுக்கு ஊக்க மிகுதியே திண்ணிய அறிவாகும் அவ்வூக்கமில்லாதவர் மரமே ஆவார். மக்கள் வடிவமே பிற மரத்திற்கும் இவனுக்கும் உள்ள வேறுபாடாம் சுபாஷிதம் - 19 உண்ணலும் உனதே உயிர்த்தலும் உனதே உடல் உயிர் மனம் எல்லாம் உனதே எண்ணலும் உனதே இச்சையும் உனதே என் செயல் பயன் எல்லாம் உனதே ----- ராமகிருஷ்ண தபோவன பஜனைப் பாடல் சுபாஷிதம் - 20 உற்றவர் நட்டவர் ஊரார் – இவர்க்கு உண்மைகள் கூறி இனியன செய்தல் நற்றவம் ஆவது கண்டோம் – இதில் நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை --- பாரதியார் (எங்கள் மதம்) சுபாஷிதம் - 21 ஊக்கமும் உள் வலியும் உண்மையிற் பற்றில்லா மாக்களுக்கோர் கணமும் – கிளியே வாழத் தகுதியுண்டோ --- பாரதியார் (நடிப்பு சுதேசிகள்) சுபாஷிதம் - 22 ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உழற்றுபவர் --- திருக்குறள் (620) பொருள்: மனம் தளராது இடைவிடாது முயற்சி செய்பவர் தமக்குத் தடையாக இருக்கும் ஊழ்வினையையும் தோற்றோடச் செய்வர் சுபாஷிதம் 23 ஊருக்குழைத்திடல் யோகம் -- நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் போருக்கு நின்றிடும்போதும் – உளம் பொங்கலில்லாத அமைதி மெய்ஞானம் ---- பாரதியார் சுபாஷிதம் 24 எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி வேண்டி னேனுக் கருளினள் காளி தடுத்து நிற்பது டெய்வத மேனும் சாகு மானுட மாயினும் அஃதைப் படுத்து மாய்ப்பன் அருட்பெருங் காளி பாரில் வெற்றி எனக்குறு மாறே ----- மகாகவி பாரதியார் சுபாஷிதம் 25 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு ----- திருக்குறள் பொருள்: யாதொரு பொருளையும் எவரெவர் சொல்லக் கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருளைக் காண்பதே அறிவாகும் சுபாஷிதம் 26 எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம் எல்லோரும் இந்திய மக்கள். எல்லோரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர் – நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் எல்லோரும் இந்நாட்டு மன்னர் --- பாரதியார் சுபாஷிதம் 27 எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு திருக்குறள் (467) சுபாஷிதம் 28 என் மனமுன் என் உடலும் என்சுகமும் என் அறமும் என் மனையும் என்மகவும் என்பொருளும் என்னறிவும் குன்றிடினும் யங்குன்றேன் கூற்றுவனே வந்தாலும் வென்றிடுவேன் காலால் மிதித்து ---- வ உ சிதம்பரனார் பொருள்: மனை – மனைவி; மகவு – குழந்தைகள்; கூற்றுவன் - எமன் சுபாஷிதம் 29 ஏழை யென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில் இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே வாழி கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர்யாரும் ஒருநிகர் சமானமாக வாழ்வமே ------ பாரதியார் சுபாஷிதம் 30 ஒல்வது அறிவது ஆறிந்து அதன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல் ----- திருக்குறள் (472) சுபாஷிதம் 31 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு… நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு நன்றிது தெரிந்திடல் வேண்டும் இந்த ஞானம் வந்தால்பின் நமக்கெது வேண்டும் ---பாரதியார் சுபாஷிதம் 32 கங்கை நதி பாபம் ; சசி தாபம்; கற்பகந்தான் மங்கலுறும் வறுமை மாற்றுமே; துங்கமிகும் இக்குணமோர் மூன்றும், பெரியோரிடம் சேரில் அக்கணமே போமென்று அறி [சசி = சந்திரன், தாபம் = வெப்பம், துங்கம் = உயர்வு] பொருள்: கங்கை நதியில் குளிப்பதால் பாவமும் சந்திரன் ஒளியினால் உடம்பின் தாபமும் கற்பக மரத்தினால் வறுமையும் நீங்கி விடுகின்ற. உயர்ந்த பெரியோரிடத்தில் பழகுவதால் இம் மூன்று குறைகளும் [பாவம், தாபம், ஏழ்மை] உடனே நீங்குகின்றன என்பதை அறிவோமாக! சுபாஷிதம் 33 கல்வி கரையில; கற்பவர்; நாள் சில; மெல்ல நினைக்கின் பிணிபல - தென்னிதின் ஆராய்ந் தமைவுடைய தற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து ---- நாலடியார் [135] (குருகு = அன்னப் பறவை) சுபாஷிதம் 34 கற்பிளவோ டொப்பர் கயவர்; கடுஞ்சினத்தின் பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே – விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப் போல மாறுமே சீ ரொழுகு சான்றோர் சினம் பொருள்: ஒழுக்கமற்றவர்களுக்கு கோபம் வரும் பொழுது கல் பிளந்ததைப் போல இருப்பார்கள் [கல் பிளந்தால் மீண்டும் ஒட்டாது] சிறந்த ஒழுக்கமுடையவர்கள் கோபம் அடையும் போது பொன் பிளந்த்தைப் போல இருப்பார்கள். [பொன்னைப் பிளந்தாலும் மீண்டும் ஒட்டும்]. வில்லிலிருந்து நதியில் பாயும் அம்பினால் நீரில் உண்டாக்கும் வடு உடனடியாக மறைந்து விடுவதுபோல சான்றோரின் கோபம் சீக்கிரம் மறைந்து விடும். சுபாஷிதம் – 35 கற்புடைப் பெண்கட் கெல்லாம் கணவனே தெய்வ மென்பார்; சொற்பொருள் அறிந்தோர்க் கெல்லாம் சொன்ன சொல் தெய்வ மென்பார்; மற்பெரும் வீரர் கெல்லாம் மானமே தெய்வ மாகும்; நற்பெயர் நாட்டிற் காக்கும் நமக்கிந்த கொடியே தெய்வம். ---- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சுபாஷிதம் 36 குலத்தினும் செயலிலும் அனைத்திலும் இக்கணந்தொட்டு நீர் யவிரும் ஒன்றே பிரிவுகள் துடைப்பீர் பிரிதலே சாதல் ஆரியர் சாதியுள் ஆயிரஞ்சாதி வகுப்பவர் வகுத்து மாய்க நீர் அனைவரும் தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம் என்பவை போற்ற எழுந்திடும் வீரச் சாதி யொன்றனையே சார்ந்தோராவீர் ----- மகாகவி பாரதியார் [குரு கோவிந்த சிம்மன் கால்ஸா பந்தை துவக்கி ஆற்றும் வீர உரை] சுபாஷிதம் 37 கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி ---- திருக்குறள் பொருள்: நல்வினையால் செழிப்பும், தீவினையால் வறுமையும் அடைதல் எல்லாரிடத்தும் நிகழ்வனவே. அவை காரணமாக மனம் ஒரு பக்கம் சாராமல் நடுநிலையோடு இருத்தலே சான்றோர்க்கு அழகு தரும் பண்பாகும். சுபாஷிதம் 38 கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து திருக்குறள் பொருள்: பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குபோல அமைதியாக இருக்க வேண்டும். காலம் வாய்த்த போது அதன் குத்துபோல் தவறாமல் செய்து முடிக்கவேண்டும் சுபாஷிதம் - 39 கோயில் பள்ளி யேதடா குறித்துநின்ற தேதடா வாயினால் தொழுதுநின்ற மந்திரங்க ளேதடா ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால் காயமான பள்ளியிற் காணலா மிறையையே சிவவாக்கியர் பாடல் சுபாஷிதம் 40 சங்கரர் காசியில் அங்கென்ன சொன்னார் சண்டான் பக்தனும் தங்குரு என்றார் எங்கள் ராமானுஜர் தங்குல மென்றே யாரையும் தொண்டுடன் கோவிலுள் சென்றார் காட்டொடு வேடனைத் தம்பியென் றெஉதிக் கழுஜினைத் தந்தை யெனக் கடன் செய்து சேட்டைக் குரங்கையும் தன்னுடன் சேர்த்து ஸீதாபி ராமனும் செய்ததைப் பார்த்தோம் ------ ஹிந்துவின் தர்மம் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சுபாஷிதம் 41 சமன்செய்து சீர்தூக்கும் கோல்போ லமந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி ---- திருக்குறள் பொருள்: துலாக்கோல் பொருளை வரையறுப்பது போலப் பகை நட்பைப் பார்க்காமல் நடுநிலைமையில் நீதி வழங்குவதே சான்றோர்க்கு அழகு சுபாஷிதம் 42 சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில் இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர் பட்டங்கில் உள்ள படி. ------ நல்வழி சுபாஷிதம் 43 சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! – தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா! தேம்பி யழுங்குழந்தை நொண்டி – நீ திடங்கொண்டு போராடு பாப்பா! --- மகாகவி பாரதியார் சுபாஷிதம் - 44 சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலாம் பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ காதில்வாளி காரைகம்பி பாடகம்பொ னொன்றலோ சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே ----- சிவவாக்கியர் பாடல் சுபாஷிதம் 45 சாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி உயர்ந்த மதி கல்வி – அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் ---- பாரதியின் பாப்பா பாட்டு சுபாஷிதம் 46 சாவது எளிது அரிது சான்றாண்மை நல்லது மேவல் எளிது அரிது மெய்போற்றல் – ஆவதன் கண் சேரல் எளிது நிலையரிது தெள்ளியராய் வேறல் அரிது சொல் ---- ஏலாதி பாடல் – 39 பொருள்: உயிர்விடுதல் என்பது எளிதாகும். கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுக்குதல் அரிதாகும். இல்லற வாழ்க்கையை அடைதல் எளிதாகும். ஆனால், அதில் நின்று பற்றற்ற ஒழுக்கத்தைப் போற்றுதல் அரிதாகும். துறவறத்தில் செல்வது எளிதாகும் ஆனால் அதில் நிலையாய் முடிவு வரை நிற்றல் அரிதாகும். எதனையும் சொல்வது எளிதாகும் ஆனால் தெளிந்த அறிவுடையவராய் அதனைச் செய்தல் அரிதாகும். சுபாஷிதம் 47 செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத் தானெனும் பேய்கெடவே – பல சஞ்சலக் குரங்குகள் தளைப்படவே வானெனும் ஒளிபெறவே – நல்ல வாய்மையி லேமதி நிலைத்திடவே தேனெனப் பொழிந்திடுவீர் – அந்தத் திருமகள் சினங்களைத் தீர்ந்திடுவீர் ஊனங்கள் போக்கிடுவீர் – நல்ல ஊக்கமும் பெருமௌயும் உதவிடுவீர் ----- பாரதியார் பாடல் சுபாஷிதம் 48 சென்றதினி மீளாது மூட ரேநீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் விழ்ந்து குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டாம் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடி இன்புற்றிருந்து வாழ்வீர்; தீமையெலாம் அழிந்துபோம் திரும்பி வாரா. --- பாரதியார் சுபாஷிதம் - 49 ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம் நல்ல பாரத நாட்டிடை வந்தீர் ஊனம் இன்று பெரிது இழைக்கின்றீர் ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர் மானம் அற்ற விலங்குகள் ஒப்ப மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ? போனதற்கு வருந்துதல் வேண்டா புண்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்! ----- பாரதியார் (சரஸ்வதி தேவியின் புகழ்) சுபாஷிதம் 50 தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துயர்ந்தோர் தம்மை மதியார் தமையடைந்தோர் ---- தம்மின் இழியினும் செல்வர் இடர் நீர்ப்பர் அல்கு கழியினும் செல்லாதோ கடல் ------- நன்னெறி கல்வியில் சிறந்த பெரியோர் தமது உயர்வை தாமே மதித்துக் கொள்வதில்லை. தம்மிலும் தழ்ந்தவரிடமும் சென்று அவரது துன்பத்தைப் போக்கி வருவர். பரந்து விரிந்த கடலிலுள்ள நீரானதுமிகச் சிறிய உப்பங்கழிகளிலும் சென்று தங்கியிருந்து உப்பைக் கொடுக்கின்றதல்லவா, அதுபோல. சுபாஷிதம் - 51 தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு ---- திருக்குறள் (731) பொருள்: குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடி[ப் பொருந்தியுள்ள நாடே நாடாகும் சுபாஷிதம் 52 தன் குணங் குன்றாத்தகைமையும் தாவில்சீர் இன் குணத்தார் ஏவின செய்தலும் – நன்குணர்வின் நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும் மேன்முறை யாளர் தொழில் ---- திரிகடுகம் பொருள்: தன் குலச்சிறப்புக் கெடாதவாறு நடத்தலும் நல்ல குணமுடையவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்தலும் நான்மறையாளர் சொல்லியவற்றைக் கடைபிடைத்தலுமே மேலார் செய்யக்கூடியவை. சுபாஷிதம் 53 தன்னில் பிறிது இல்லை தெய்வம் நெறிநிற்பின் ஒன்றானும் தான்நெறி நில்லானேல் – தன்னை இறைவனாச் செய்வானும் தானே தான் தன்மைச் சிறுவனாச் செய்வானும் தான் --- அறநெறிச்சாரம் சுபாஷிதம் 54 (சத்ரபதி சிவாஜி தன் படைக்குக் கூறியது) தாய்த்திரு நாட்டை தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல் மானமொன் றிலாது மாற்றலர் தொழும்பராய் ஈனமுற்றிருக்க எவங்கொலோ விரும்புவான்? தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி நாயென வாழ்வோன் நமரிலிங் குளனோ? --- மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் சுபாஷிதம் 55 திங்களும் வானில் திரிகிற வரையில் எங்களுக்குரிமை இந்நாடே! – இதில் தங்கள் உரிமைச் சாத்திரம் சொல்வோர் எங்கு வந்தாலும் மண்னோடே யரது வீட்டில் யரது பாட்டு சோரரகள் வலையில் விழ மாட்டோம் – இனி வேர்திகாரம் பாரத நாட்டில் வேர் பிடிக்காது விட மாட்டோம் --- கவியரசு கண்ணதாசன் சுபாஷிதம் 56 தீரத்தி லேப்படை வீரத்திலே – நெஞ்சில் ஈரத்திலே உப காரத்திலே சாரத்திலே மிகு சாத்திரங் கண்டு தருவதிலே உயர் நாடு பாரதியார் பாடல் சுபாஷிதம் 57 துன்பம் உவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை ---- திருக்குறள் (669) பொருள்: செயல் தொடங்கும் பொழுது இடையூறும் துன்பமும் ஏற்பட்டாலும் அதற்காகத் தளர்ந்து விடாமல், செயல் முடியும் போது ஏற்படும் வெற்றி மகிழ்ச்சியும் இன்பமும் கருதி செயல்பட வேண்டும். எடுத்த காரியத்தை இனிது முடித்தால் வரும் மன அமைதியும் மகிழ்ச்சியும் ஈடு இணை அற்றவை. சுபாஷிதம் - 58 தேடிச் சோறு நிதந்தின்று . . . . பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்ப மிக ஊழன்று பிறர் வாடப் பல செயல்கள் புரிந்து நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்று இரையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ---- மகாகவி பாரதியார் சுபாஷிதம் 59 தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய் பாரதியார் சுபாஷிதம் 60 தோளை வலியுடைய தாக்கி – உடற் சோர்வும் பிணிபலவும் போக்கி – அரி வாளைக் கொண்டு பிளந்தாலிம் – கட்டு மாறா வுடலுறுதி தந்து – சுடர் நாளைக் கண்ட்தோர் மலர்போல் – ஒளி நண்ணித் திகழுமுகந் தந்து – மத வேளை வெல்லுமுறைகூறித் – தவ மேன்மை கொடுத்தருளல் வேண்டும் மகாகவி பாரதியார் சுபாஷிதம் 61 நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொற்கேட்பதுவும் நன்றே – நல்லார் குணங்களுரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கியிருப்பதுவும் நன்றே ------ மூதுரை சுபாஷிதம் 62 நயனுடையான் நல்கூர்ந்தா நாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு திருக்குறள் பொருள்: ஒப்புரவாளன், பொதுநலன் ஆற்றதலாசிய கடமைகள் தான் செய்ய முடியாமை பற்றியே வருந்துவான். தான் எதிர்பர்த்த என்பன் அடையமுடியவில்லையே என்று ஒரு போதும் சுயநலத்தோடு வருந்தமாட்டான் சுபாஷிதம் 63 நல்லதை எண்ணுவதே நன்மனத்துக் கான அணி நல்லதைப் பேசுவதே நாவணி – நல்லதைச் செய்வதே தேகத்தின் சீரணி இம்மூன்றும் எய்தினர் உய்தி இவண் ---- அணுயறுபது சுபாஷிதம் 64 நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரி வாள் எங்கள் தாய் – அவர் அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின் ஆனந்தக் கூத்தி டுவாள் --- பாரதியார் சுபாஷிதம் 65 நல்ல குலமென்றும் தீய குலமென்றும் சொல்லளவு அல்லால் பொருளில்லை – தொல்சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை என்றிவற்றான் ஆகும் குலம் ---- நாலடியார் பொருள்: நல்ல குலமென்றும் தீய குலமென்றும் சொல்லும் வார்த்தைகளுக்கு ஆழமான பொருளில்லை. தொன்றுதொட்டு வரும் சிறப்புடைய ஒளியைத் தரும் பொருளாகிய தவம் கல்வி மற்றும் முயற்சி ஆடியவற்றால்தான் குலத்திற்கு சிறப்புண்டாகும் சுபாஷிதம் 66 நாமிருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம் – இது நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம் – இந்தப் பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம் – பரி பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம் ----- பாரதியின் சுதந்திரப் பள்ளு சுபாஷிதம் - 67 நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும் நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு புல்லிதழ் பூவிற்கும் உண்டு ---- நாலடியார் - 221 பொருள்: நாம் நல்லார் என் நம்பி ஏற்றுக் கொண்ட ஒருவரிடம் சில தவறுகள் காணப்பட்டாலும் நாம் தாங்கிக் கொள்ள வேண்டும். நெல்லுக்கும் கூட ஒரு குறை தவிடு உண்டு, நீரின் தூய்மைக்கூட நுரை என்னும் களங்கம் உண்டு. பூவிற்கும் புற இதழ் உண்டு. குறையில்லாத இடம் குறைவு எனவே நண்பர் குறை தாங்குதல் நிறை ஆகும. சுபாஷிதம் 68 நாநலம் என்னும் நலன் உடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று --- திருக்குறள் சுபாஷிதம் 69 பக்கத் திருப்பவர் துன்பம் – தனைப் பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி ஒக்கத் திருந்தி உலகோர் – நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி ---- எங்கள் மதம் -- பாரதியார் கவிதைகள் சுபாஷிதம் 70 பண்டு முளப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமிபோனால் முளையாதாம் – கொண்டபேர் ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி ஏற்ற கருமம் செயல் ----மூதுரை பொருள்: விளையும் நெல்லிருந்து கிடைப்பது அரிசியே ஆனாலும், நெல்லிலிருந்து உமியை நீக்கி விட்டால் மீண்டும் நெற்கதிர் முளைக்காது. அதுபோல நல்ல திறமையானவருக்கு அவரது ஆற்றலுக்கு ஏற்றார்போல் நற்செயல் செய்யாவிட்டால் அந்த திறமையால் பயனேதுமில்லை. சுபாஷிதம் 71 பாத்துஊண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது குறள் பொருள்: எக்காலத்திலும் பகுத்துக் கொடுத்து உண்ணப் பழகியவர்களை பசி என்னும் தீயநோய் தீண்டுதல் இல்லை சுபாஷிதம் – 72 பாஞ்சால வீரன் பகவத் சிங்கம் பதறி மடிந்ததைக் கேட்டவுடன் பாண்டியர் சீமையில் வீரரெல்லாம் பட்டாளம் சேர்ந்தது ஏதுக்கம்மா? தங்கமாராட்டியத் திலக மகான் தண்டனை பெற்றதைத் தங்கவில்லை எங்கள் தமிழ்ப்படை, தோள்தட்டியே ஏனென்று கேட்டது வெள்ளையனை எத்தனை எத்தனை தியாகப் பரம்பரை ஏதுக்கு இப்படிப் பாடுபட்டார்? இத்தவ நாடு ஒற்றுமை யாலே என்றுமே வாழ்ந்திட வேண்டுமன்றோ? ---- எஸ். டி. சுந்தரம் சுபாஷிதம் - 73 பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் மறவாமே நோற்ப தொன்றுண்டு; பிறர் பிறர் சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்து யார் யார்க்குந் தாழ்ச்சி சொலல் பொருள்: மக்களால் போற்றப்படும் வாழ்க்கை வேண்டுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு பழக்கம். பிறரது நல்ல குணங்களை அனைவருக்கும் தெரிய எடுத்துக் கூறுதல். பிறரது குறைகளை வெளியே சொல்லாமல் இருத்தல். சுபாஷிதம் 74 புத்தேள் உலகத்து ஈண்டும் பெறல் அரிதே ஒப்புரவின் நல்ல பிற ----- திருக்குறள் [213] பொருள்: பிறருக்கு உதவுவது போன்ற பிற நற்செயல்களை விண்ணுலகிலும், மண்ணுலகிலும் பெறமுடியாது. உதவும் செயலே ஒப்பற்ற நல்ல செயலாகும் சுபாஷிதம் 75 புத்தி யதற்கு பொருந்து தெளிவளிக்கும் சுத்த நரம்பினறல் தூய்மையுறும்; -- பித்தொழியும் தாலவழி டாதபித்தம் தத்தம் நிலை மன்னும்; அதி காலை விழிப் பின் குணத்தைக் காண் பொருள்: அதிகாலை விழிப்பதினால் புத்தி தெளிவு உண்டாகும். இரத்தம் சுத்தமாகும். அதிக பித்தம் இருந்தால் அது நீங்கும். வாத பித்த சிலெத்துமங்கள் அளவோடிருப்பதால் நோய்கள் வராது. அதிகாலையில் (4.00 – 4.30 மணி) எழுந்து பழிகி இந்த நன்மைகள் உண்டாவதை தெரிந்து கொள். சுபாஷிதம் 76 பட்ட வகையால் பலரும் வருந்தாமல் கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம் முட்டுடைத் தாகி இடைதவிர்த்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று --- பழமொழி நானூறு பொருள்: அறம் செய்பவர் குறுக்கிடும் இடர்களைக் கருதி இடையிலே அதனை நிறுத்தி விடுதல் கூடாது தொடங்கியதை முழுவதும் செய்து பயன்பெற வேண்டும் சுபாஷிதம் 77 பேயா யுழலுஞ் சிறுமனமே பேணா யென்சொல் இன்றுமுதல் நீயா யொன்றும் நாடாதே நினது தலைவன் யானேகாண்; தாயாம் சக்தி தாளினிலும் தரும மெனயான் குறிப்பதிலும் ஓயா தேநின் றுழைத்திடுவாய் உரைத்தேன் அடங்கி உய்யுதியால் --- பாரதியார் சுபாஷிதம் - 78 பாரதம் முழுவதும் ஒரு பண்பாடாம் தேசம் ஒன்று தேசியம் ஒன்று கூரிய இமயப் பனிவரை தொட்டுக் குமரி வைரைக்கும் கூறுகூறாக பகிர்ந்து பார்த்தாலும் பண்பாடொன்றே தடக்கைக் கனிக்கு சாட்சிகள் வே/ண்டாம் ------ கண்ணதாசன் சுபாஷிதம் - 79 பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைத்து திருக்குறள் (738) பொருள்: மக்களிடையே நோயற்ற வாழ்வு, வறுமையற்ற செல்வம், சுருங்காத விளைச்சல் மனமகிழ்ச்சி உறுதியான பாதுகாப்பு இந்த ஐந்து அழகுகளும் கொண்டதே சிறந்த நாடு ஆகும் சுபாஷிதம் 80 பொய் சொல்லக்கூடாது பாப்பா என்றும் புறஞ் சொல்லல் ஆகாது பாப்பா தெய்வந் நமக்குத் துணை பாப்பா – ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா ----- மஹாகவி பாரதியார் சுபாஷிதம் 81 மனதி லுறுதி வேண்டும் வாக்கினி லேயினிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் ---- பாரதியார் சுபாஷிதம் 82 மனத்தோடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம் செய் வாரின் தலை திருக்குறள் [295] பொருள்: எண்ணத்தாலும் பேச்சாலும் தூய்மை உடையவன் தானம், தவம் முதலியன செய்யும் பெரியோரைக் காட்டிலும் தலை சிறந்தவன். வெளிப்படியயாகத் தோன்றும் தவம், தானம் முதலியவற்றை விட, உள்ளூர அமைந்துள்ள வாய்மையே பெரிதும் மதிக்கப்படும் சுபாஷிதம் – 83 மண்ணுலகத்தில் உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறி தெனினும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன் என்ணுறும் எனக்கே நின்னருள் பலத்தால் இசைத்த போ திசைத்த போ தெல்லாம் நண்ணும் அவ்வருத்தம் தவிர்க்க நல்வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய். --- ராமலிங்க வள்ளலார் சுபாஷிதம் 84 மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை யிழப்பாரோ? கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டி சிரியாரொ? --- பாரதியார் சுபாஷிதம் 85 மனம்வேறு, சொல்வேறு மனுதொழில் வேறு வினைவேறு பட்டவர்போல் மேவும்; அனமே மனமொன்று சொல்லொன்று வான்பொருளும் ஒன்றே கணம் ஒன்று மேலவர்தம் கண் ---- நீதிவெண்பா (மேவும் – பொருந்தும், அனமே – அன்னமே, கனம் – மதிப்பு, பெருமை, மேலவர் – உயர்வுமிகு சான்றோர்) சுபாஷிதம் 86 மிகுதியால் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியால் வென்று விடல் ---- திருக்குறள் (158) பொருள்: செருக்காலும் மடமையாலும் தமக்குக் கொடுமை பல செய்தவர்களை மிகுந்த பொறுமையால் வெற்றி கொள்ளல் வேண்டும். பொறுத்துக் கொள்வது தோல்வியாகாது. அதுதான் உயர்ந்த வெற்றி எவ்வகையிலிம் நாம் தரம் தாழ்ந்துவிடக் கூடாது சுபாஷிதம் - 87 முட்களை உன்மேல் தூவிடுவோர்க்கும் மலர்களை நீவிர் தூவிட வேண்டும் மலர்களை நீவிர் கொய்வீர் ! அவரோ முட்களை நாடித் துயருறுதல் நேரும்! - கபீர்தாசர் சுபாஷிதம் - 88 மெய்மை பொறையுடைமை மேன்மை தவம் அடக்கம் செம்மை ஒன்றின்மை, துறவுடைமை – நன்மை திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன அறம்பத்தும் ஆன்ற குணம் ----அறநெறிச்சாரம் பொருள்: வாய்மை, பொறுமை, உயர்வு, தவம், அடக்கம், நடுவு நிலைமை தனக்கு என ஒன்று இல்லாமை, துறவு, நன்மை, மாறுபாடில்லாத நோன்பு மேற்கொள்ளல் என்ற இந்த அறங்கள் பத்தும் சிறந்த குணங்கள் சுபாஷிதம் – 89 வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு வாழும் மனிதர்க் கெல்லாம் பயிற்றி பலகல்வி தந்து – இந்தப் பாரினை உயர்த்திட வேண்டும் ---- சுப்ரமண்ய பாரதியார் சுபாஷிதம் – 90 வடக்கு தெற்கு என்று பிரிக்கும் வாதம் மங்கிப் போகும் தடுக்க யாருமின்றி நாட்டில் எங்கும் தங்கலாகும் கொடுக்கல் வாங்கல் செய்ய வணிகம் கூசும் இழுக்கில்லாமல் பிடித்தமான தொழிலை எங்கும் செய்து பிழைக்கலாகும் ஒருமைப்பாடு எண்ணம் நம்முள் உறுதி கொண்டு விட்டால் அருமையென்ற எதையும் செய்யும் ஆற்றல் கண்டு விட்டோம் பெருமை கொள்ளுமாறு மக்கள் பேத உணர்ச்சி நீங்கும் உரிமையோடு நாட்டின் வளத்தை உயர்த்தும் உணர்ச்சி பொங்கும் ----- நாமக்கல் கவிஞர் வெ ராமலிங்கம் பிள்ளை சுபாஷிதம் – 91 வானம் துளங்கில் என்? மண் கம்பமாகில் என்? மால் வரையும் தானம் துளங்கித் தலைதடு மாறில் என்? தண் கடலும் மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்? வேலை நஞ்சுண்டு ஊனமொன்றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே ----- திருநாவுக்கரசர் தேவாரம் பொருள்: (வானம் – ஆகாயம் ; துளங்கல் – அச்சம் தரும்படி இடி இடித்தல், வீழ்தல் ; மண் கம்பம் – நில நடுக்கம்; மால் வரை – பெரிய மலை; தானம் – இடம்; துளங்கல் – அசைதல்; தலை தருமாறல் – இடம் விட்டுப் பெயர்தல்; மீனம் – நட்சத்திரங்கள் ; படில் – வீழ்ந்தால் ; சுடர் – சூரியனும், சந்திரனும் ; வேலை – கடல் ; ஊனம் – தீங்கு ) பக்தி நிறைந்த லட்சியவாதியை எதுவும் சித்தம் கலங்கச் செய்ய முடியாது என்று பொருள் சுபாஷிதம் 92 வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில் வழுங்குமரி முனை பாப்பா கிடக்கும் பெரியகடல் கண்டாய் – இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா ---- மஹாகவி பாரதியார் சுபாஷிதம் - 93 வலிமை வலிமை என்று பாடுவோம் என்றும் வாழும் சுடர்க்குலத்தை நாடுவோம் கலியைப் பிளந்திடக் கை ஓங்கினோம் – நெஞ்சில் கவலை இருள் அனைத்தும் நீங்கினோம் ---- பாரதியார் சுபாஷிதம் 94 வாழ்வு பெருக்கும் மதியே சக்தி மநிலங் காக்கும் மதியே சக்தி தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி ‘சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி வீழ்வு தடுக்கும் விறலே சக்தி விண்ணையளக்கும் விரிவே சக்தி ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி ----- சுப்ரமணிய பாரதியார் சுபாஷிதம் 95 வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் திருக்குறள் அரசன் போரிடச் செல்வதற்கு முன்பே அப்போருக்கு வேண்டிய திறன்களையும், தனது ஆற்றலையும், எதிரியின் ஆற்றலையும், தனக்கும் எதிரிக்கும் துணையாக நிற்பவரின் ஆற்றல்களையும் ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் தன்னை தயார்படுத்திக் கொண்டபின் போரிட வேண்டும். சுபாஷிதம் 96 வீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு! பாரத பூமி பழம்பெரும் பூமி; நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்! --- பாரதியார் சுபாஷிதம் 97 வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுன் யானையால் யனை யாத்தற்று ----- திருக்குறள் பொருள்: ஒரு திட்டத்தை அல்லது காரியத்தை நிறைவேற்றும் போது அதன் வழியே அதனோடு தொடர்புடைய அல்லது இணையான மற்றொரு திட்டத்தையும் செய்து முடித்துக் கொள்வது, ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போல. சுபாஷிதம் 98 வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே ஒல்லுந் துணையும் ஒன்று உய்ப்பன் பொறை இனிதே இல்லது காமுற் றிரங்கி இடர்ப்படார் செய்வது செய்தல் இனிது ----- இனியவை நாற்பது பொருள்: முன்னேற்றத்தை விரும்பு கோபபபடாதவனவது தவம் இனிமையானது. கூடியவரையும் எடுத்துக்கொண்ட தொரு கருமத்தை நடத்துவோனது ஆற்றல் இனிமையானது. இல்லாததொரு பொருளை விரும்பி, மனம் ஏங்கி துன்பப்படாதவராய், (உள்ளது கொண்டு) செய்யத்தக்கதொரு கருமத்தை செய்வது இனிமையானது. சுபாஷிதம் - 99 வேதமுடைய திந்த நாடு – நல்ல வீரர் பிறந்ததிந்த நாடு சேதமில்லா ஹிந்துஸ்தானம் – இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா மகாகவி பாரதியார் சுபாஷிதம் – 100 வேணும்வேணு மென்றுநீர் வீணுழன்று தேடுவீர் வேணுமென்று தேடினாலு முன்னதல்ல தில்லையே வேணுமென்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின் வேணுமென்ற வப்பொருள் விரைந்து காணலாகுமே ---- சிவவாக்கியர் பாடல் சுபாஷிதம் 101 வைகறை யாமம் துயில் எழுந்து தான் செய்யும் நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து, வாய்வதின் தந்தையும் தாயும் தொழுது எழுக என்பதே முந்தையோர் கண்ட முறை ---- ஆசாரக் கோவை சுபாஷிதம் 102 விரைந்துரையார் மேன்மேல் உரையார் பொய்யாய பரந்துரையார் பாரித்துரையார் ஒருங்கனைத்தும் சில் எழுத்தினாலே பொருள் அடங்கக் காலத்தால் சொல்லுக செவ்வி அறிந்து ----- ஆசாரக்கோவை பொருள்: ஒருவரிடம் ஒன்றைச் சொல்லுகிற போது வேகமாகப் பேச மாட்டார். சொன்னவற்றையே மேலும் மேலும் சொல்லிக் கொண்டிருக்கமாட்டார். பொய்யான செய்திகளை கோடிட்டுக் காட்டாமல் விளக்கிக் கொண்டிருக்க மாட்டார். விரிவாக நீண்ட நேரம் பேச மாட்டார். சொல்ல வேண்டியவற்றை எல்லாம் சில சொற்றொடர்களிலே, கேட்பவர் விளங்கிக் கொள்ளும் வகையில் காலமும் இடமும் அறிந்து கவனமாகப் பேச வேண்டும்


8 comments: